Custom Search

வியாழன், 16 அக்டோபர், 2014

தராசு...


இன்னும்
நெருங்கி வந்து
கேட்டுப்பார்
ஒரு உயிரின் முனகலை 
உன்னால் 
உணரமுடியும்...
 
விண்மீன்களைத்
துளைத்தெடுத்த
வெளிச்சத்தில் உன் முகம்
சதிராடுது - கண்டு என்
சதையாடுது..
 
நான்
இப்பொழுதுதான்
நாகரீகங்களுடன்
போட்டியிட எத்தனிக்கிறேன்...
நீயோ
நவநாகரீகத்துடன்
ஜொலிக்கிறாய்...
 
என் எல்லாத்
திசைகளிலும்
கச்சிதமாய் உன் சாரல்...
என் மனத்தை
முழுவதும்
அலங்கரித்து நிற்கிறது
உன் காதல்..
 
உன் நிழல்
என்மீது விழுந்தால்கூட
பூரிக்கிறது உயிர்...
 
நீ
நான்
கவிதை
சொற்கள் வெவ்வேறு..
மூன்றையும்
வெவ்வேறு நேரத்தில்
வெவ்வேறு விகிதத்தில்
ஒன்று சேர்க்க
கிடைப்பது காதல்...
 
விளையாடாதே..
என் தவிப்பு
உன் நியாயங்களைவிட
வன்மையானது...
 
கண்களைக் கட்டியபடி
தராசுபிடித்த
காதல் தேவதையிடம்
காதல் குற்றமொன்றை
முன்மொழிந்தேன்...
 
கண்களைக் கட்டிக்கொண்டவளிடம்
என்ன நியாயம் கிடைக்கும்..?
விழுப்புண்களையும் 
பார்வையால்
விழும் புண்களையும்
சுமந்து தவிக்கிறது மனது...
 
வஞ்சித்தது
உன் காதல் என்றேன்...
வஞ்சியால்
வஞ்சிக்கப்பட்டதற்கு
வெகுமானம் வேண்டுமென்று
புன்னகைத்தாள் தேவதை...

என்னதான் செய்வது
என்னால்
கவிதைதான் எழுதமுடியும்
உன்னைப்போல
காதலை எழுத முடியாது...

என் இதயத்தை
ஒருதட்டில் வைக்கிறேன்...
உன் மௌனத்தை
மறுதட்டில் வைக்கிறாய்..
சரிகிறது முள்....
மௌனமாய்ச் சிரிக்கிறாள்
காதல் தேவதை

உன் முகப்பிம்பத்துடன்...

திங்கள், 13 அக்டோபர், 2014

சுட்டி

என்
எண்ண அமைப்புகள்
உன்னாலேயே
நிறுவப்படுகின்றன 
நிர்வகிக்கப்படுகின்றன..
 
என்னை
அழகுபடுத்தி ரசிப்பதும்
அவ்வப்போது உந்தன்
செவ்விதழால்
முத்தமிட்டு மகிழ்வதும்
இயல்பான் உன் 
செயல்பாடாகிப்போனது...
 
நீ
விரும்பிய நிரல்களை(Program) என்
விருப்பத்தை எதிர்பாராமல்
என்மேல் ஏவிவிடுகிறாய்....
ஏவியது எதுவெனினும்
உனக்காகவென்றே
பாவித்துக்கொள்கிறது மனம்...
 
சுட்டுவிரல் நகக்கண்ணை
அம்புக்குறியாக்கி என்னைத்
தொட்டுத்தொட்டு விளையாடுகிறாய்
நானோ நீ என்மேல்
பட்டதை அப்பட்டமாக்கி
திரையிட்டு மகிழ்கிறேன்...

உன்
விரல்களின் ஸ்பரிசத்தால் - என்
நிரல்களை அழித்து
அப்பழுக்கற்ற சொந்த
சிந்தனைகளை எளிதில்
குப்பைக்கு அனுப்புகிறாய்...
உன்னால்
அப்பட்டமாக்கப்பட்ட
நிழற்படமாய் என் நினைவுகள்...
 
பொதிந்துகிடக்கும்
பயன்நோக்கு (Application) மொழிகளை
நீ தீண்டத்தீண்ட
பயனடைகிறது வாழ்க்கை...
 
என்மீதான
உன் உலாவலில் (Browsing)
தீட்சையடைகிறது தேகம்...
 
எதிர்பாராமல் என்மேல்
பூசப்படும் நச்சு நிரல்களை (Virus)
புதிர்போடாமல்
நச்சுநீக்கி சொடுக்கி
சதிராடி நச்சு களைகிறாய்....
 
சிற்சில வினாடிகள் நீ
தீண்டாத தருணத்தில்
பற்பல யுகங்களைத்
தாண்டிப்பறக்கிறது சிந்தனை...
உன்னைப்பற்றிய தேடல்களுடன்...
திரைக்காப்பாய் (Screen Saver)
இந்தத் தேடல்...
 
வினாடிகள் நீட்சி தாங்காது
முகமிழந்து முகவரியிழந்து
விழிமூடி இறந்துபோகிறது திரை (Monitor)...
 
நீ என்முன்
தோன்றினால் மட்டுமே
செயல்படத்தொடங்குகிறது
மீண்டும் இந்தச்சிந்தனை...
 
அருகில் வந்தவுடன்
மிக லாவகமாக
என்னை உன்னுள்
மீளேற்றிக்கொள்கிறாய்...
 
நீ என்னைத்
தீண்டித்தீண்டி மகிழும்
என் எலிச்சுட்டி (Mouse)...
நான் நீ
சுட்டியதைத் திரையிடும்

உன் கணித்திரை (Monitor)....

தேடல்...


திரையிட்டு மறைத்தாலும்
முக்தியே கதியென
இறைதேடித்திரியும்
பக்தன் போல - உன்னில்
கறையற்ற காதல்தேடிப்
பறக்கிறது பறவை...
 
தேடல் பகுத்தறிவென்று
சயனங்களை மறந்து
பயணிக்கிறது உயிர்...

எங்கெங்கோ உனைத்தேடி
என்னுதிரம் கனன்றபடி
கண்ணுக்குள் தேடினேன் - நீ
கண்ணீராய் வெளியேறிக்
கள்ளமின்றிச் சிரித்தாய்..
 
தொடரும் கவியுரு 
எழுத்துக்களில் தேடினேன்...
விழுதுபோல வேரூன்றி
எழுதும் கவிதையின்
கருவாகிப்புன்னகைத்தாய்...
 
மனதினுள் தேடினேன்...
சிதறும் எண்ணங்களின்
குணமாய் - உயிரன்பின்
பதறும் ஓரன்பாய்
முளைத்திருந்தாய் மூளைக்குள்....
 
உடலெனும் உதிரிபாகத்தில்
மடலிட்டுத் தேடினேன்..
ஊனுயிரில் ஒட்டிக்கொண்டு
தேனுயிரின் என்சைமாய்ப்
பேணும்படி மணந்தாய்...
 
உண்மைக்குள் தேடினேன்..
மாய பிம்பமாய் என்றும்
மாயாத மனதிற்குள்
மௌனமாய் நகைத்தாய்..
 
உயிருக்குள் உறைந்து 
உயிர்ப்பிக்கும் மூச்சிற்குள் 
உனைத்தேடி
மூச்சிறைக்கிறேன்....
சுவாசப்பைகளைக்
காதல் விலங்கிட்டபடி
உயிர்க்காற்றாய் (ஆக்ஸிஜனாய்) நீ
உயிர்த்திருக்கிறாய் - என்
உயிராய் இருக்கிறாய்...
 
உதிரத்தில் தேடினேன்...
உமிழ்நீரில் வழிந்தோடி
உயிர்நீராய் நீ  என்
உதிரத்தில் நிரம்பி
உணர்வாய் உயிர்க்கிறாய்...
 
எங்கெங்கோ உனைத்தேடி..
என் உயிர்தேடி ஓடுகிறேன்..
நீயோ
எனக்குள்ளேயே ஒளிந்துகொண்டு
என்னை ரசிக்கிறாய்...
பரிகசிக்கிறாய்...

அழைப்பிதழ்..


ஒவ்வொரு மனிதனுக்குமான
வெவ்வேறு விதமான
அழைப்பிதழ்களோடு
விடிகிறது காலை...
 
எல்லாப் பூக்களும்
மகரந்தங்கள் தளும்ப...
தத்தம் அழைப்பிதழ்களை
விநியோகித்துக் கொண்டிருக்கின்றன...
 
ஒவ்வொரு அழைப்பிதழிலும்
வெட்கத்தின் வியர்வைத்துளிகள்
இதழ்களைத் தொட்டும் தொடாமலும்...
 
பூக்கள் பூத்துக்குலுங்க
புன்னகைக்கிறது இதழ்...
இதழ்களில் தேன் தடவிப் 
பூரிக்கின்றன மகரந்தங்கள்...

நீ
அழும் மழலை
என்னிடம்
காதல் உறிஞ்சிக்குடிக்கிறாய்....

உண்மைதான்...
தித்திக்கும் தேன் சொரிந்தபடி

எனக்கான அழைப்பிதழ்களுடன்
நீ அமைதியாய்க்
காத்துக்கொண்டிருக்கிறாய்....
 
உன் அழைப்பிதழை
நான் விரும்பவில்லை...  
நீ அழையா விருந்தாளி நான்...

தத்துவம்..



வார்த்தைகள் கண்ணீர்விட்டுக்
கதறியழும்போதுதான்
கவிதை பிறக்கிறது...

எந்த நெறிமுறைக்குள்ளும்
சிக்காமல்
எல்லா நெறிமுறைகளையும்
சிக்கலாக்கிவிட்டிருக்கிறது காதல்..

இதோ....
என் பாதையெங்கும்
அகலமறுக்கும் முள் மெத்தைகள்...
பதுங்கு குழிகளெனப்
பதுமையின் நினைவுகள்...

கனவு, கவிதை,
நினைவு, நிஜம்,
புனைவு, புதுமையென
சுமந்தும், சுவைத்தும்
துன்புற்றும், இன்புற்றும்
மகிழ்கிறது காதல்...

அதோ..
கண்ணெதிரே நீ நடந்து வரும்
அந்த அரூபப் பாதையில்தான்
சிந்தப்பட்டிருக்கின்றன....

மெல்லிய உன் பாதத்தை வருடியபடி
பரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன...
இந்த வாழ்க்கைக்கான தத்துவங்கள்...

வாழ்வின்
வெவ்வேறு திசைகளில் தோன்றிய
வெவ்வேறு தத்துவங்களின் சாராம்சமாய்ப்
பொலி(ழி)ந்து தள்ளுகிறது காதல்...

தெளிவாக நுகரமுடிகிறது...
என் வாழ்க்கைக்கான
உன்னத தத்துவம் நீ...!
எவர் மனது புண்படாத
அழகிய தத்துவம்
உன் காதல்...!

ரகசியம்...


உயிரை உயிருக்குள்
ஒளித்துவைக்கும்
மர்ம முடிச்சில் நீ
மனமகிழ்கிறாய்...

உன் மர்ம முடிச்சுகளுக்கு
மேலும் முடிச்சிட்டு
ரகசியம் பேணுகிறாய்...
நீ சடைபின்னும் நேர்த்தியை
இப்பொழுது அறிய முடிகிறது...

அந்த
ரகசிய மாளிகையில்
ரகசியத்தோடு ரகசியமாய்
ரகசிய முடிச்சிடப்பட்ட
என் காதல் ரகசியங்களை
பகிரங்கப்படுத்த நீ
விரும்புவதில்லை...

என்பதால்
நீ என்னை
விரும்பும் ரகசியம்கூட
இன்னமும்
ரகசியமாகவே இனிக்கிறது...

ஆனால்...
உன்னை நினைத்த வினாடியில்
ஒளித்துவைக்கப்பட்ட ரகசியங்கள்
அம்பலமாகி மழையெனப்
பொழியத்தொடங்கிவிடுகின்றன...
அந்த ரகசியம் மட்டும்
எனக்குப் புரியவேயில்லை...

வியாழன், 22 செப்டம்பர், 2011

சுவடுகள்..

கருவறையில் சிறைவைத்து
      கண்ணீரின் கதைவைத்து - நான்
வரும்வரையில் காத்திருந்து
      வளமூட்டி வளர்த்த சுவடுகள்....

நிதம் என்னைச் சீராட்டி
       நினைவுகளைப் பாராட்டி..
சிதம் தொய்யச் சித்திரமாய் -என்
       சிந்தனை செதுக்கிய சுவடுகள்...

மீண்டுமீண்டு தோற்ற நொடியெல்லாம்
      மீண்டும் மீண்டும் நினைவில் நிற்கும்
ஈன்றெடுத்த தாய்பதித்த
      ஈரமற்ற சோகச் சுவடுகள்..

கண்ணீரைக் கலசமாக்கி
      கதிதொலைந்து தோற்றுப்போய்
செந்நீரை எனக்களித்த தாயின்
       கண்ணீர் பதித்த சுவடுகள்...

நித்தம் சிறுகதைகள் கேட்டு
       நீலியி சாபம் கேட்டு
சித்தம் சுருங்கத் தொலைத்த
       சிறகொடிந்து சிதைந்த சுவடுகள்...

நாளுமெனை நினைவில் நிறுத்தி
      நாற்புறமும் காத்திருந்து - நான்
வாழும்வரை உடன்திளைத்த
      வற்றாத நேசச் சுவடுகள்....

நாவிற்குள் நுழைவதெல்லாம்
       நவின்றமிழின் ஊற்றொன்றே - என்
காவுக்குள் புகுந்ததெல்லாம்
       கவின்றமிழே உன்சுவடு....

கவிதை எழுதும் நேரத்திலும் - நான்
       கண்ணீர்விடும் நேரத்திலும்
கடவுளின் காரியமில்லை யெனஉயர்
       கவிஞன்  பதித்த சுவடுகள்...

விலங்கினக் கூட்டத்திலும் - நான்
       விளங்காது கிடந்தபோதும்
கலங்காத மதிகொடுத்த உயர்
       கவிதை புதைத்த சுவடுகள்...

கடவுளால் ஏதும் ஆவதில்லை
       காதல் சக்தியாலே ஆவதுண்டு
கடல்போன்ற கவிஞன்முகம் - என்
       கல்நெஞ்சைச் சிதைத்த சுவடுகள்...

இளமைக்கால மயக்கத்திலே - உன்
       இமைகள் கொடுத்த தயக்கத்திலே...
வளமின்றி வற்றிப்போன - என்
        வறண்ட மனச்சுவடுகள்...

காதல்வந்து மோதமோத - என்
       கண்ணுக்குள் ஆடிப்பாட
வேதம் வந்து சொல்லவில்லை - உன்
       வேல்விழி புதைத்த சுவடுகள்...

காத்திருக்கும் நேரத்திலே
        காதல் சொன்ன ஆழத்திலே
பூத்திருக்கும் உன்னெழிலில்
        புதைந்தமனச் சுவடுகள்...

மதிகழன்று மண்வீதியில்
        மனம்தொலைய நடைநடந்து
விதிமீதுதான் பழிபோட்டு
        வீண்போன வெற்றுச்சுவடுகள்....

சுரண்டல் செல்வங்களும்
        சுயநலப் பித்தர்களும் -இந்த
திரண்ட பூமியைச் சுரண்டிடக்கண்டு
        மிரண்ட மனதின்மிச்சச் சுவடுகள்...

கணந்தோறும் உன்நினைவில் நான்
       கதிதொலைந்த போதெல்லாம்
சினமேதுமின்றி நண்பர்கள் - என்
       சிதலத்தைச் சிறப்பித்த சுவடுகள்...

காற்றைக்கூட கலக்கிவிட்டு
      கனவுகளைத் தொலைத்துவிட்டு
ஊற்றெடுக்கும் உன்நினைவில்
      உள்ளம் புதைந்த உண்மைச்சுவடுகள்...

கார்கவிழ்த்த மழைவெள்ளம்
      கண்களில் நிறைந்துவர - என்
மார்புக்குள் புதைந்துவிட உன்
      முகம் புதைத்த சுவடுகள்...

சுவடுகள் பலவந்து
       சூட்சுமமாய் எனைத்தாக்க
திவலைகளாய் மனம்பூத்து
        திகட்டாமல் எனைச்சிதைக்க....

இத்தனை சுவடுகள் என்னை
       இடர்பாட்டில் விட்டபோதும் - உன்
பாதச்சுவடுகள் மட்டும் - மனம்
       பறிதவிக்க வைக்குதடி....