Custom Search

திங்கள், 13 அக்டோபர், 2014

தேடல்...


திரையிட்டு மறைத்தாலும்
முக்தியே கதியென
இறைதேடித்திரியும்
பக்தன் போல - உன்னில்
கறையற்ற காதல்தேடிப்
பறக்கிறது பறவை...
 
தேடல் பகுத்தறிவென்று
சயனங்களை மறந்து
பயணிக்கிறது உயிர்...

எங்கெங்கோ உனைத்தேடி
என்னுதிரம் கனன்றபடி
கண்ணுக்குள் தேடினேன் - நீ
கண்ணீராய் வெளியேறிக்
கள்ளமின்றிச் சிரித்தாய்..
 
தொடரும் கவியுரு 
எழுத்துக்களில் தேடினேன்...
விழுதுபோல வேரூன்றி
எழுதும் கவிதையின்
கருவாகிப்புன்னகைத்தாய்...
 
மனதினுள் தேடினேன்...
சிதறும் எண்ணங்களின்
குணமாய் - உயிரன்பின்
பதறும் ஓரன்பாய்
முளைத்திருந்தாய் மூளைக்குள்....
 
உடலெனும் உதிரிபாகத்தில்
மடலிட்டுத் தேடினேன்..
ஊனுயிரில் ஒட்டிக்கொண்டு
தேனுயிரின் என்சைமாய்ப்
பேணும்படி மணந்தாய்...
 
உண்மைக்குள் தேடினேன்..
மாய பிம்பமாய் என்றும்
மாயாத மனதிற்குள்
மௌனமாய் நகைத்தாய்..
 
உயிருக்குள் உறைந்து 
உயிர்ப்பிக்கும் மூச்சிற்குள் 
உனைத்தேடி
மூச்சிறைக்கிறேன்....
சுவாசப்பைகளைக்
காதல் விலங்கிட்டபடி
உயிர்க்காற்றாய் (ஆக்ஸிஜனாய்) நீ
உயிர்த்திருக்கிறாய் - என்
உயிராய் இருக்கிறாய்...
 
உதிரத்தில் தேடினேன்...
உமிழ்நீரில் வழிந்தோடி
உயிர்நீராய் நீ  என்
உதிரத்தில் நிரம்பி
உணர்வாய் உயிர்க்கிறாய்...
 
எங்கெங்கோ உனைத்தேடி..
என் உயிர்தேடி ஓடுகிறேன்..
நீயோ
எனக்குள்ளேயே ஒளிந்துகொண்டு
என்னை ரசிக்கிறாய்...
பரிகசிக்கிறாய்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக