என்
உன்
எண்ண அமைப்புகள்
உன்னாலேயே
நிறுவப்படுகின்றன
நிர்வகிக்கப்படுகின்றன..
என்னை
அழகுபடுத்தி ரசிப்பதும்
அவ்வப்போது உந்தன்
செவ்விதழால்
முத்தமிட்டு மகிழ்வதும்
இயல்பான் உன்
செயல்பாடாகிப்போனது...
நீ
விரும்பிய நிரல்களை(Program) என்
விருப்பத்தை எதிர்பாராமல்
என்மேல் ஏவிவிடுகிறாய்....
ஏவியது எதுவெனினும்
உனக்காகவென்றே
பாவித்துக்கொள்கிறது மனம்...
சுட்டுவிரல் நகக்கண்ணை
அம்புக்குறியாக்கி என்னைத்
தொட்டுத்தொட்டு விளையாடுகிறாய்
நானோ நீ என்மேல்
பட்டதை அப்பட்டமாக்கி
திரையிட்டு மகிழ்கிறேன்...
உன்
விரல்களின் ஸ்பரிசத்தால் - என்
நிரல்களை அழித்து
அப்பழுக்கற்ற சொந்த
சிந்தனைகளை எளிதில்
குப்பைக்கு அனுப்புகிறாய்...
உன்னால்
அப்பட்டமாக்கப்பட்ட
நிழற்படமாய் என் நினைவுகள்...
பொதிந்துகிடக்கும்
பயன்நோக்கு (Application) மொழிகளை
நீ தீண்டத்தீண்ட
பயனடைகிறது வாழ்க்கை...
என்மீதான
உன் உலாவலில் (Browsing)
தீட்சையடைகிறது தேகம்...
எதிர்பாராமல் என்மேல்
பூசப்படும் நச்சு நிரல்களை (Virus)
புதிர்போடாமல்
நச்சுநீக்கி சொடுக்கி
சதிராடி நச்சு களைகிறாய்....
சிற்சில வினாடிகள் நீ
தீண்டாத தருணத்தில்
பற்பல யுகங்களைத்
தாண்டிப்பறக்கிறது சிந்தனை...
உன்னைப்பற்றிய தேடல்களுடன்...
திரைக்காப்பாய் (Screen Saver)
இந்தத் தேடல்...
வினாடிகள் நீட்சி தாங்காது
முகமிழந்து முகவரியிழந்து
விழிமூடி இறந்துபோகிறது திரை (Monitor)...
நீ என்முன்
தோன்றினால் மட்டுமே
செயல்படத்தொடங்குகிறது
மீண்டும் இந்தச்சிந்தனை...
அருகில் வந்தவுடன்
மிக லாவகமாக
என்னை உன்னுள்
மீளேற்றிக்கொள்கிறாய்...
நீ என்னைத்
தீண்டித்தீண்டி மகிழும்
என் எலிச்சுட்டி (Mouse)...
நான் நீ
சுட்டியதைத் திரையிடும்
உன் கணித்திரை (Monitor)....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக