Custom Search

வியாழன், 22 செப்டம்பர், 2011

சுவடுகள்..

கருவறையில் சிறைவைத்து
      கண்ணீரின் கதைவைத்து - நான்
வரும்வரையில் காத்திருந்து
      வளமூட்டி வளர்த்த சுவடுகள்....

நிதம் என்னைச் சீராட்டி
       நினைவுகளைப் பாராட்டி..
சிதம் தொய்யச் சித்திரமாய் -என்
       சிந்தனை செதுக்கிய சுவடுகள்...

மீண்டுமீண்டு தோற்ற நொடியெல்லாம்
      மீண்டும் மீண்டும் நினைவில் நிற்கும்
ஈன்றெடுத்த தாய்பதித்த
      ஈரமற்ற சோகச் சுவடுகள்..

கண்ணீரைக் கலசமாக்கி
      கதிதொலைந்து தோற்றுப்போய்
செந்நீரை எனக்களித்த தாயின்
       கண்ணீர் பதித்த சுவடுகள்...

நித்தம் சிறுகதைகள் கேட்டு
       நீலியி சாபம் கேட்டு
சித்தம் சுருங்கத் தொலைத்த
       சிறகொடிந்து சிதைந்த சுவடுகள்...

நாளுமெனை நினைவில் நிறுத்தி
      நாற்புறமும் காத்திருந்து - நான்
வாழும்வரை உடன்திளைத்த
      வற்றாத நேசச் சுவடுகள்....

நாவிற்குள் நுழைவதெல்லாம்
       நவின்றமிழின் ஊற்றொன்றே - என்
காவுக்குள் புகுந்ததெல்லாம்
       கவின்றமிழே உன்சுவடு....

கவிதை எழுதும் நேரத்திலும் - நான்
       கண்ணீர்விடும் நேரத்திலும்
கடவுளின் காரியமில்லை யெனஉயர்
       கவிஞன்  பதித்த சுவடுகள்...

விலங்கினக் கூட்டத்திலும் - நான்
       விளங்காது கிடந்தபோதும்
கலங்காத மதிகொடுத்த உயர்
       கவிதை புதைத்த சுவடுகள்...

கடவுளால் ஏதும் ஆவதில்லை
       காதல் சக்தியாலே ஆவதுண்டு
கடல்போன்ற கவிஞன்முகம் - என்
       கல்நெஞ்சைச் சிதைத்த சுவடுகள்...

இளமைக்கால மயக்கத்திலே - உன்
       இமைகள் கொடுத்த தயக்கத்திலே...
வளமின்றி வற்றிப்போன - என்
        வறண்ட மனச்சுவடுகள்...

காதல்வந்து மோதமோத - என்
       கண்ணுக்குள் ஆடிப்பாட
வேதம் வந்து சொல்லவில்லை - உன்
       வேல்விழி புதைத்த சுவடுகள்...

காத்திருக்கும் நேரத்திலே
        காதல் சொன்ன ஆழத்திலே
பூத்திருக்கும் உன்னெழிலில்
        புதைந்தமனச் சுவடுகள்...

மதிகழன்று மண்வீதியில்
        மனம்தொலைய நடைநடந்து
விதிமீதுதான் பழிபோட்டு
        வீண்போன வெற்றுச்சுவடுகள்....

சுரண்டல் செல்வங்களும்
        சுயநலப் பித்தர்களும் -இந்த
திரண்ட பூமியைச் சுரண்டிடக்கண்டு
        மிரண்ட மனதின்மிச்சச் சுவடுகள்...

கணந்தோறும் உன்நினைவில் நான்
       கதிதொலைந்த போதெல்லாம்
சினமேதுமின்றி நண்பர்கள் - என்
       சிதலத்தைச் சிறப்பித்த சுவடுகள்...

காற்றைக்கூட கலக்கிவிட்டு
      கனவுகளைத் தொலைத்துவிட்டு
ஊற்றெடுக்கும் உன்நினைவில்
      உள்ளம் புதைந்த உண்மைச்சுவடுகள்...

கார்கவிழ்த்த மழைவெள்ளம்
      கண்களில் நிறைந்துவர - என்
மார்புக்குள் புதைந்துவிட உன்
      முகம் புதைத்த சுவடுகள்...

சுவடுகள் பலவந்து
       சூட்சுமமாய் எனைத்தாக்க
திவலைகளாய் மனம்பூத்து
        திகட்டாமல் எனைச்சிதைக்க....

இத்தனை சுவடுகள் என்னை
       இடர்பாட்டில் விட்டபோதும் - உன்
பாதச்சுவடுகள் மட்டும் - மனம்
       பறிதவிக்க வைக்குதடி....

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

வேவு

முற்றுப்பெறாத இந்தக்
காதல் அத்தியாயத்தில் சிக்கித்
திணறிக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை...

காதல் வீதியில்
எதிரெதிர் வீட்டில்தான்
நீயும் நானும்...

உடைந்து கிடக்கும்
பிறை வளையலாய் நிலவு...
உடைந்த நிலவின்
நொறுங்கிய துகள்களாய்
விண்மீன் கிறுக்கல்கள்...

நொறுங்கிய இந்த
இதயச் சில்களைக்
காதல் நூல்கொண்டு
கோர்க்க முனைகிறேன்...

தென்றலில் தத்தளிக்கும்
சிறகுபோல உன்னிடம் சிக்கித்
தத்தளிக்கிறது காதல்..

பெண்மைத்தாழிட்டுப்
பூட்டித்தான் கிடக்கிறது
உன் காதல்க் கதவு...

முகம்காண ஏங்கி
முற்றச்சிறையிலடைகின்றேன்...
கைகொட்டிச் சிரிக்கிறது நிலவு...
நான் அழுவதா...? சிரிப்பதா..?
விசும்பல்களோடே
அஸ்தமிக்கிறது கிழமை...

முற்றச்சிறையிலிருந்து விடுபட்டு
மூலச்சிறைக்குள் அடைபடுகிறேன்..
முனகலுடன் மூடிக்கொள்(ல்)கிறது
என் இதயக்கதவு...

மென்மையாய்த்தன் இருபுறக்
கதவுகளையும் தட்டிப்பார்த்து
திருப்தியடைந்துகொள்கிறது
காதல்...

நீயோ...
பலமுறை தட்டியும்
திறக்காத கதவுகளிடை
சாளரம் மட்டும் திறந்து 
வேவுபார்க்க முனைகிறாய்...

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

நீ... நீ மட்டுமே....


என்
வெட்டவெளி
இதயத்தைச்
சுட்ட விழியினளே...
 
என் வெற்றுமனதைக்
கூடாரமாக்கி
குடிபுகுந்தவளே...
 
உன்
புன்னகை சிந்தும்
பூவிதழ் கண்டே
புவித் திங்களும்
புத்தொளி வீசுகிறான்...
 
விண்ணொத்த
கருங்கூந்தல்
வெள்ளிகளை உசுப்புகிறது...
 
விற்கணை புருவத்தை
விகற்பமாய்ப் பார்த்து
சொற்றனை இழந்தேன்...
 
நீலவிழிகொண்ட
கோல மகளே...
உன்
விழிகண்டு
விதியமைத்த பிரம்மனும்
மதிமயங்கல் கண்டேன்...
 
பரிகசிக்கவியலாத
யதார்த்தம் உன்
பார்வை - என் இதயத்தின்
பதார்த்தம்...
 
உன் பார்வை
அம்புகள் தைத்ததில்
குருடாகிப் போயின
என் அகக்கண்கள்..
 
இளம்
வாழைக்குருத்து நாசி...
களைத்த பெருமூச்சில்
சுருங்கி விரிவதுகண்டு
இளைத்துப் போகும்
இந்த மனசு...
 
உன்
செவிமடல்கள் - என்
கவிமடல்களுக்கு
அப்பாற்பட்டவை...
 
சிவந்த
தாமரைப்பூவில்
பவளத்தைப் பூசிய
இதழ்கள் - இந்த
இதயம் முழுவதும் உன்
இதழ்களுக்கடக்கம்...
 
உன் குரலுக்குப்
போட்டியிட்டுத்
தோற்கும்
கால் கொலுசு...
 
வரட்சி சிறிதுமற்று
வசிக்கும் உன் கன்னம்
உனைக்கண்ட
மிரட்ச்சியில்
சிறிது கெட்டு
மசித்துப் போனதாய்
என் எண்ணம்...
 
இத்தனை ஆயுதங்களை
முகத்தில் தரித்து
நிராயுதபானியான என்னை
முகப்பிலேயே எதிர்கொள்கிறாய்..
 
ஒவ்வொரு ஆயுதமும்
பலமாய்த் தைக்கிறது
இதயத்தில்...
 
இத்தனை
தாக்குதல்களின் பின்னும்
தளராமல் நகர்கிறேன்
உன்னிடத்தில்
 
காரணம்
நீ.... நீ மட்டுமே...
இந்த இதயத்தைச்
சல்லடையாக்கியவள்
நீ... நீ மட்டுமே...

செவ்வாய், 19 ஜூலை, 2011

கேள்வி...


வழிநெடுகிலும்
கோடிக்கணக்கான விடைகள்
தத்தமக்குரிய கேள்விக்குறிகளுடன்...
பின்னிப்பிணைந்தபடி...

அந்த அகல விழிச் சாலையில்
கரும் முற்றுப்புள்ளியுடன் கூடிய
விடையைச் சுமந்தபடி அலைகிறேன்...

விழிவிடை பெற்ற
இமைக்கேள்வி தாண்டிப்
புருவக்கேள்விகளின் மத்தியில்
நெற்றி பதிலில் சஞ்சரிக்கிறேன்...

கீழே தலைகீழாகக்
கவிழ்த்தப்பட்ட கேள்விக்குறியாய்
நாசி - அதன் விடையாய் மூச்சு...

புன்னகை விடையணிந்த
இதழ்களுக்குள் சிக்கித்
தத்தளித்தபடி தேடுகிறேன்....

கன்னம், நெற்றியென உருப்பொருள்களையும்,
நாணம், சீற்றமென கருப்பொருள்களையும்
கொண்ட நீண்ட விடையில் திக்குமுக்காடுகிறேன்...
இதன் கேள்வியாய் அழகிய உன் முகம்....

தேடல் பகுத்தறிவு என
நம்பி ஏமாந்தவன் நான்...
இந்தத் தேடல் என்னைப் 
பித்தனாகவல்லவா ஆக்கியிருக்கிறது....!

நீதான் எனக்கான விடை 
என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது...
ஆனால்,
உன்னைப் பெறுவதற்கான
கேள்விதான் எது...???
தேடி அலைகிறேன் இன்னமும்...

செவ்வாய், 1 மார்ச், 2011

குறும்பு...



கரும்பும் அரும்பும் துரும்பும் திரும்பும்
இரும்பும் விரும்பும் குறும்பு..  - வெண்பா..


எதிர்வீட்டு மாயக்கா உன்னைத்
துரத்திக்கொண்டே இருப்பாள்...
உன்னை யாருக்கும் பிடிப்பதில்லை...
எனக்கும் கூட...

கோபத்திலிருக்கும்போது அதை
உச்சப்படுத்தவேயென என்
இரு கண்களையும் இருகப்பொத்தி
விளையாடுவாய்...

என்னுள் கோபம்
முற்றிப்போயிருக்கக்கூடும்...
அடிக்கக் கை ஓங்குவேன்..
களுக்கெனச் சிரித்துத்
தப்பியோடுவாய்...

இரவெல்லாம் உறக்கமின்றி
இரக்கமின்றித் திரிந்தமனம்
அதிகாலைக் கிறக்கத்தில்
அதிசயமாய் உறங்கமுற்படும்..

நீயோ என் காதோரக்
கதுப்பு முடியை முறுக்கியிழுத்து
வேடிக்கை பார்ப்பாய்...
வெறுக்கென எழுவேன் - நீ
வெகுதூரம் சென்று உன்
ஆள்காட்டிவிரலில் கொக்கிபோட்டு
உதட்டை மடித்து
நாவால் கொச்சமிடுவாய்...

எச்ச மனது கோபத்தில்
ஒருவேளை உனைத்
துச்சமாய் நினைத்திருக்கக்கூடும்...

சோகத்தில் கண்ணீர்விடும் நாட்களில்
உன் பட்டுவிரல்களால் என்
கன்னம் வருடுவாய் - பின்னர் வருடிய
கன்னத்தைக் கிள்ளிவிட்டு ஓடுவாய்..

வலித்தபடி உனைக்கிள்ள
வலிந்து தேடுவேன்...
நீ சிரித்தபடி வந்து
வலித்த கன்னத்தில்
வலிந்து இதழ் புதைப்பாய்..

உடல்நலம் குன்றி நீ
உறங்கிக்கிடக்கையில்
”எங்கே உன் புள்ள,
அவனைத் துரத்திகிட்டே
இருப்பேன்.. இப்ப ஆளைக்
காணலியே” என
ஆசையோடு வினவுவாள்...

ஆமாம் உன்னை
யாருக்கும் பிடிக்காமலில்லை...
எனக்கும் கூட....

திங்கள், 21 பிப்ரவரி, 2011

முள்



இதோ
எட்ட இருந்தபடியே என்னை
எட்டிப்பிடித்துக் 
குத்தத்தொடங்கிவிட்டது உன்
காதல் முள்...
அதில் உடலெங்கும்
இரத்தக் கிறுக்கல்கள்
இந்தக் கவிதை வரிகள் போல...

நீ மணிமுள் போல
அழுத்தமானவள்...
உன்னை நிமிடத்திற்கொருமுறை
முத்தமிட்டுத் தோற்கும்
நொடிமுள் நான்...

உன் பிரிவை நினைந்து
தூங்கமாட்டாத இரவுகள்...
ஏங்க மட்டுமே உயிர்த்திருக்கும்
இந்த நொடிமுள்..

என்னுள் நீ
முத்தமிட்டதைவிட உன்
நினைவுகளின் முத்தத்தின்
காயங்கள் அதிகம்..

நொடிக்கொருமுறை அலைவுறும்
நொடிமுள் போல நான்...
என் நினைவுகளுக்குள்
அலைவுறுது காதல் நிமிடமுள்...

ஒட்டுமொத்த உன் நினைவுகளில்
தீண்டப்படுகிறது...தூண்டப்படுகிறது...
இந்த நொடிமுள்...

நீ
நான்
காதலென 
மூன்றுவகை முட்களைக் 
காலமாக்கிக் காட்டுகிறது 
வாழ்க்கையெனும் மணிப்பொறி...

புதன், 19 ஜனவரி, 2011

துணை / இணை



இனி உன்பாடு
திண்டாட்டம்தான்..
இதோ
என் முரட்டுக்கவிதைகள்
உன்னைக் காதலிக்கத்தொடங்கிவிட்டன...

எனை நினையெனக்
கணைதனைப் புனை..
பனைமனையெனை
சினைவினைந்தனை
நனை நீ சுனை

இணையெனைப் பிணை
பிணைந்தெனை அணை
உனை எனையாக்க முனை
திணை நீ வாழ்க்கைத் துணை...

என் தனிமைச் சாபத்தை
வேரறுக்க உன்னைத்
துணையாக்கி வரம்தந்தாய்..

பகலில்
இரை தேடிப்பறந்த பறவை
இரவில்
இணை தேடிக்கூடு திரும்புகிறது...
துணைதேடிப் பறந்த காலம் போய்
இணைதேடிப் பறக்கிறது வாழ்க்கை..

இணைக்கும் துணைக்குமிடையே
நூலிழை வித்தியாசம்தான்..
துணை எனதாய் இல்லாதிருக்கலாம்.
இணை தனதாய் மட்டுமே இருக்க இயலும்....