என்னை
பயன்படுத்திக்கொள்கிறாய்...
வெங்காயம் உரிக்கவும்...
வெள்ளைப்பூண்டு அரியவும்...
அங்கம் வருடவும்.. கூந்தல்
அள்ளிச்செருகவும்...
உன்
தேவைக்கு மீறிய என்
வளர்ச்சியை நீ
விரும்புவதில்லை...
இரக்கம் துளியுமற்று...
வெட்டி வீழ்த்துகிறாய்..
அதிகப்பிரசங்கித்தனம்
கூடாதென்று...
மென்மையாய் கவனிப்பதும்
கொஞ்சம் காயப்படுத்துவதும்..
முத்தமிடுவதும் - கோபத்தில்
கடித்துத்துப்புவதும்....
வைத்தகண் வாங்காமல்
என்னிலேயே குறியாய் நீ...
பொய்த்த மழைக்கு ஏங்கும்
பூமிபோல நான்...
தேகம் முழுக்க
மருதாணிதடவி
அழகுபார்க்கிறாய்...
முகம்முழுக்க சாயம்பூசி
அகமகிழ்கிறாய்...
கண்மயங்கும்போதும்
கண்ணீர்விடும்போதும்...
புன்னகைக்கும்போது.
புதிருக்கு விடை காணும்போதும்..
என்னைக் கடிந்து கொள்கிறாய்...
எல்லாம் அழகுதான்..
ஆனால்...
நகம் கடிக்கிறாயே..
அந்தப் பேரழகில்
சிற்சில வினாடிகளில்
சொற்சுவையற்று
கற்சிலையாகிறேன்....
நீ விரும்பியபடியே
என்னை
பயன்படுத்திக்கொள்கிறாய்..
அழகும்படுத்துகிறாய்....
அழும்படியும் படுத்துகிறாய்....
நான் உன் நகக்கண்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக