Custom Search

புதன், 25 நவம்பர், 2009

சிறை...










சிறைக்குள் நீ
சிறைக்கு வெளியே
சிலகோடி
ஆசைகளுடன்
ஏக்கங்களுடன் நான்...

நீ
பெண்மையெனும்
கூண்டில் சிக்கி
உண்மையிழந்து
தவிக்கிறாய்....


என்
அர்த்தக் கேள்விகளுக்கான
விடையை
அர்த்தமற்ற உன்னிடமே
கேட்கிறேன்....

"என்னைக்
காதலிக்கிறாய்தானே..?"

வசீகரிக்கும் புன்னகையை
பதிலாய் அனுப்புகிறாய்...
அழகில்
திக்கற்றுப்போய்
திசைமாறுகிறது கேள்வி...


ஒருநாள்
சிறையைப் பொத்துக்கொண்டு
நீ வெளிவரக்கூடும்..

அந்தநாள் எந்தன்
வாழ்நாளின்
மௌன நகைப்புகளுக்கு
விடைகோலும் நாள்...

நீ
மகிழ்ச்சியுடன்தான்
இருக்கிறாய்....

என்னிடம் அகலவிழிகாட்டி
பொம்மை நாய்க்குட்டியை
வாரியணைத்து
முத்தமழை பொழிகிறாய்...

அருகாமைக் குழந்தையின்
பட்டுக்கன்னங்களை - என்
அறியாமை முற்ற
தொட்டுக்கிள்ளி விளையாடுகிறாய்

சிறையிருப்பது பற்றி நீ
யோசிப்பதே இல்லை- இந்த
கறைபடிந்த மனதுதான்
யாசித்துத் தவிக்கிறது....
திரைக்குள் ஒளிந்த
உண்மை வேண்டி...

அழகு தேவதையின்
மரணக்குடிலாய்
உன் கூண்டு....

அதுவே
மகிழ்வான கூண்டென
மனனம் செய்துகொள்கிறாய்...
நெகிழ்வான என்மனதோ
மகிழ்வின்றித் தவிக்கிறதே....

இதுவரை நீ
வெளிவரவில்லை..
வெளிவர விரும்பவுமில்லை..

இப்பொழுது புரிகிறது
சிறைக்குவெளியே நீ...
உன் நினைவில்
சிலகோடி ஆசைகளுடன்
பலகோடி ஏக்கங்களுடன்
சிறைக்குள் நான்...................?!


வெள்ளி, 20 நவம்பர், 2009

இருட்டு...



இரண்டு
வெவ்வேறு குப்பியில்
பரிணமித்திருக்கும்
ஒளிப்பேழைகள் நாம்...

ஓங்குபண்பைப் போலவே
ஒடுங்குபண்பும்
வாழ்வின் நியதி....
பிறப்புக்கு நடுநடுவே
இறப்பும் நியதிதானே...

இந்த மிகக்குறைவான
வாழ்நாளில்
நீ எனக்கு அறிமுகமாகிறாய்..
முற்றுப்பெறாத
சொற்களை உள்ளடக்கி...

ஒளிர்தல் மட்டுமே
என் கடமை - நான் ஏன்
உன்னைப்பார்க்கவேண்டும்..??

அறிந்தும் அறியாமலும்
உன்னைப்பார்த்தவுடன்
என்னைச்
செமித்துவிட்டேன்...
 
என் ஒளிவீச்சை
நான் இழக்கவில்லை - என்றாலும்
ஒளிரவுமில்லை...
அந்த வெளிச்சம் எவருக்கும்
உதவவுமில்லை...

சலனப்படுகிறேன்..
ஒளி மங்கித் தவிக்கிறேன்..
ஒளியுடன் இருக்கும்போதே
இருளாய் உணர்கிறேன்...

என்
ஒளிப்பேழையைத்தான் -
உன் மௌனபிம்பம்
இருட்டடித்துவிட்டதே..

இருளில் மூழ்கி
உயிர்விடுவதைவிட
உன் மௌனத்தில் மூழ்கி
உயிர்விடுவது
எத்தனை கொடூரமானது...!?

எதிர்ப்புகளை
விழுங்கிவிட்ட இருட்டின்
இரண்டு
ஒளிப்பேழைகள் நாம்...

நாமும் ஒருநாள்
விழுங்கப்படுவோம்...
இருள் நம்மை
ஏப்பம்விடக் காத்திருக்கிறது..

இருள் நம் வாழ்க்கை....

திங்கள், 16 நவம்பர், 2009

கண்


உன் தேவைக்கேற்ப
என்னை
பயன்படுத்திக்கொள்கிறாய்...

வெங்காயம் உரிக்கவும்...
வெள்ளைப்பூண்டு அரியவும்...
அங்கம் வருடவும்.. கூந்தல்
அள்ளிச்செருகவும்...

உன்
தேவைக்கு மீறிய என்
வளர்ச்சியை நீ
விரும்புவதில்லை...
இரக்கம் துளியுமற்று...
வெட்டி வீழ்த்துகிறாய்..
அதிகப்பிரசங்கித்தனம்
கூடாதென்று...

மென்மையாய் கவனிப்பதும்
கொஞ்சம் காயப்படுத்துவதும்..
முத்தமிடுவதும் - கோபத்தில்
கடித்துத்துப்புவதும்....

வைத்தகண் வாங்காமல்
என்னிலேயே குறியாய் நீ...
பொய்த்த மழைக்கு ஏங்கும்
பூமிபோல நான்...

தேகம் முழுக்க
மருதாணிதடவி
அழகுபார்க்கிறாய்...
முகம்முழுக்க சாயம்பூசி
அகமகிழ்கிறாய்...

கண்மயங்கும்போதும்
கண்ணீர்விடும்போதும்...
புன்னகைக்கும்போது.
புதிருக்கு விடை காணும்போதும்..
என்னைக் கடிந்து கொள்கிறாய்...

எல்லாம் அழகுதான்..
ஆனால்...
நீ வெட்கப்படும்போது
நகம் கடிக்கிறாயே..
அந்தப் பேரழகில்
சிற்சில வினாடிகளில்
சொற்சுவையற்று
கற்சிலையாகிறேன்....

நீ விரும்பியபடியே
என்னை
பயன்படுத்திக்கொள்கிறாய்..

அழகும்படுத்துகிறாய்....
அழும்படியும் படுத்துகிறாய்....
நான் உன் நகக்கண்....