Custom Search

செவ்வாய், 19 ஜூலை, 2011

கேள்வி...


வழிநெடுகிலும்
கோடிக்கணக்கான விடைகள்
தத்தமக்குரிய கேள்விக்குறிகளுடன்...
பின்னிப்பிணைந்தபடி...

அந்த அகல விழிச் சாலையில்
கரும் முற்றுப்புள்ளியுடன் கூடிய
விடையைச் சுமந்தபடி அலைகிறேன்...

விழிவிடை பெற்ற
இமைக்கேள்வி தாண்டிப்
புருவக்கேள்விகளின் மத்தியில்
நெற்றி பதிலில் சஞ்சரிக்கிறேன்...

கீழே தலைகீழாகக்
கவிழ்த்தப்பட்ட கேள்விக்குறியாய்
நாசி - அதன் விடையாய் மூச்சு...

புன்னகை விடையணிந்த
இதழ்களுக்குள் சிக்கித்
தத்தளித்தபடி தேடுகிறேன்....

கன்னம், நெற்றியென உருப்பொருள்களையும்,
நாணம், சீற்றமென கருப்பொருள்களையும்
கொண்ட நீண்ட விடையில் திக்குமுக்காடுகிறேன்...
இதன் கேள்வியாய் அழகிய உன் முகம்....

தேடல் பகுத்தறிவு என
நம்பி ஏமாந்தவன் நான்...
இந்தத் தேடல் என்னைப் 
பித்தனாகவல்லவா ஆக்கியிருக்கிறது....!

நீதான் எனக்கான விடை 
என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது...
ஆனால்,
உன்னைப் பெறுவதற்கான
கேள்விதான் எது...???
தேடி அலைகிறேன் இன்னமும்...