Custom Search

செவ்வாய், 1 மார்ச், 2011

குறும்பு...



கரும்பும் அரும்பும் துரும்பும் திரும்பும்
இரும்பும் விரும்பும் குறும்பு..  - வெண்பா..


எதிர்வீட்டு மாயக்கா உன்னைத்
துரத்திக்கொண்டே இருப்பாள்...
உன்னை யாருக்கும் பிடிப்பதில்லை...
எனக்கும் கூட...

கோபத்திலிருக்கும்போது அதை
உச்சப்படுத்தவேயென என்
இரு கண்களையும் இருகப்பொத்தி
விளையாடுவாய்...

என்னுள் கோபம்
முற்றிப்போயிருக்கக்கூடும்...
அடிக்கக் கை ஓங்குவேன்..
களுக்கெனச் சிரித்துத்
தப்பியோடுவாய்...

இரவெல்லாம் உறக்கமின்றி
இரக்கமின்றித் திரிந்தமனம்
அதிகாலைக் கிறக்கத்தில்
அதிசயமாய் உறங்கமுற்படும்..

நீயோ என் காதோரக்
கதுப்பு முடியை முறுக்கியிழுத்து
வேடிக்கை பார்ப்பாய்...
வெறுக்கென எழுவேன் - நீ
வெகுதூரம் சென்று உன்
ஆள்காட்டிவிரலில் கொக்கிபோட்டு
உதட்டை மடித்து
நாவால் கொச்சமிடுவாய்...

எச்ச மனது கோபத்தில்
ஒருவேளை உனைத்
துச்சமாய் நினைத்திருக்கக்கூடும்...

சோகத்தில் கண்ணீர்விடும் நாட்களில்
உன் பட்டுவிரல்களால் என்
கன்னம் வருடுவாய் - பின்னர் வருடிய
கன்னத்தைக் கிள்ளிவிட்டு ஓடுவாய்..

வலித்தபடி உனைக்கிள்ள
வலிந்து தேடுவேன்...
நீ சிரித்தபடி வந்து
வலித்த கன்னத்தில்
வலிந்து இதழ் புதைப்பாய்..

உடல்நலம் குன்றி நீ
உறங்கிக்கிடக்கையில்
”எங்கே உன் புள்ள,
அவனைத் துரத்திகிட்டே
இருப்பேன்.. இப்ப ஆளைக்
காணலியே” என
ஆசையோடு வினவுவாள்...

ஆமாம் உன்னை
யாருக்கும் பிடிக்காமலில்லை...
எனக்கும் கூட....