புதன், 25 ஆகஸ்ட், 2010
மதிப்பெண்...
இதோ
மதிப்பிடப்படுகிறது
இந்த வாழ்க்கை...
உன் மௌனத்தால்
நிரப்பப்பட்ட வெற்றுப்பக்கத்தில்
தேறுமோ.. தேறாதோ... என
அந்தரத்தில் என் காதல்...
காதல் உணர்வுகளை
இருதயக்குழிக்குள்
பச்சைக்குத்தி வைத்திருக்கிறேன்..
உன் பார்வையில் தெரிகிறது..
நீ
திருட்டுத்தனமாய் அதைப்
படித்திருக்க வேண்டும்...
இந்தக் காதல் தேர்வில்
கேட்கப்பட்ட மில்லியன்
கேள்விகளுக்கு
மௌனவிடையளித்தபடி
புன்னகைக்கிறாய்...
உதட்டுச் சுழிவிலேயே
சிந்தப்படுகிறது பதில்...
பெரும்பாலும் உன்
மௌனப் பூச்சியத்திலிருந்து
நீ வெளிவருவதில்லை...
நீயும் மதிப்பிட முயல்கிறாய்...
என் தேடலுக்குப் புன்னகையால்...
தவறுகளுக்கு சீற்றத்தால்....
உன்
பார்வைக்கு சில மதிப்பெண்கள்..
புன்னகைக்குச் சில..
ஸ்பரிசத்திற்கு கூடுதல் மதிப்பெண்..
தீண்டலுக்கு உச்சபட்ச மதிப்பெண் என
மதிப்பிட்டு மகிழ்கிறது மனது...
எல்லோரையும் போலவே
என் தேர்வுக்கான முடிவுகளை
எதிர்நோக்கி ஏக்கத்துடன் நான்...
நான்
மதிப்பு துளியுமற்ற
ஆண் - என்
மதிப்பைக் கூட்டவென்றே
பிறந்துள்ள
மதிப் ’பெண்’ நீ..
புதன், 18 ஆகஸ்ட், 2010
புதிர்..
காதல் எனும்
மூன்றெழுத்து மந்திரத்தை
மனனம் செய்தபடி உன்
மௌனப் புதிருக்கான
விடை தேடித் பறக்கிறேன்..சுற்றிலும் மௌனக்கட்டங்களால்
முன்னேறும் ஒவ்வொரு கட்டத்திலும்
உன் மௌனத்தின் சுவடுகள்மெ(வ)ல்லிய கத்திகொண்டு
காயப்படுத்தி அழகுபார்க்கின்றன...
ரத்தம் சொட்டச் சொட்ட
சித்தம் கலங்கி நடக்கிறேன்..
எப்பொழுதேனும் உன் மௌனம்
தழும்பும் மொழிகளைச்
சிந்திவிடக்கூடும்...
மனம் சோர்வடையும் போது
ஆங்காங்கே சிந்திக்கிடக்கும்
உன் புன்னகையை அள்ளிப்பருகித்
தொடர்கிறது பாதை...
பல இடங்கள் உன்
சீற்றத்தின் நெருப்பால்
மூடப்பட்டுள்ளன...
மூடப்பட்ட இதயக்கதவுகளை
தட்டிப்பார்த்தபடியே
திருப்திப்படுத்திக்கொள்கிறது கனவு...
பலவிதமான கட்டங்கள்..
பலவிதமான பாதைகள்..
எதிலேனும் உன்
புதிருக்கான விடை கிடைத்துவிடக்கூடும்..
எல்லாப் பாதைகளும் உன்னை
நோக்கியே நகர முற்பட்டாலும்
உயிர்த்துளிகள் கரைய
நரகத்துளையிட்டு மூடப்பட்ட
கதவுகளிடையே நகர்கிறது வாழ்க்கை..
நீ
விடை காணவியலாத
புதிர்...
உன் வட்டத்திற்குள்
சிக்கிய வார்த்தை இந்த
உயிர்...
வெண்பா..
சீற்ற நெருப்பு சிறைபோ லடைக்குமே..
தேற்றச் சிலதுளிப் புன்னகை சிந்தியே..
தோற்றப் பிழையெனத் தோன்றுமுன் பாதையும்
கூற்று தெளியாப் புதிர்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)